2021 சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இருதரப்பு வாதங்களும் நடைபெற்றது. அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்றும் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஓ.எஸ்.மணியன் தரப்பில் வாதிடப்பட்டது.
ரூ.60 கோடி அளவிற்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளதாகவும், இரு வேறு சமூக மக்களிடையே விரோதத்தை தூண்டியும், பரிசுப் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் செய்தும், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்தும் வெற்றி பெற்றதாக வேதரத்தினம் தரப்பினர் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லும் எனவும் வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தார்.