அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான சிவி சண்முகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டம் காண வைத்துவிட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாடின. உலகம் முழுவதும் பல கோடி பேரை தாக்கிய கொரோனா தடு்ப்பூசி கண்டுபிடித்த பிறகு சற்று ஓயத்தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.
தற்போது தமிழ்நாட்டிலும் கடந்த 2 வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் ஓரிரு நபர்களுக்கு மட்டுமே தொற்று பதிவாகி இருந்த நிலையில் கிடுகிடுவென உயர்ந்து 104 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஐ தாண்டுவது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிவி சண்முகம் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 528 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சென்னை மாவட்டத்தில் 14 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேருக்கும், கோவை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.