தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீடுகளுக்குள்ளே முடங்கி இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை 3 நாட்களுக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வரலாற்றில் இது வரை இல்லாத அளவாக ஒரே நாளில் 95 செ.மீட்டர் மழை தூத்துக்குடியில் பதிவானது. இதனையடுத்து பெரும்பாலான வீடுகளில் மழை நீர் சூழ்ந்தது. வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வரமுடியாத அளவிற்கு காட்டாற்று வெள்ளம் சென்றது. மேலும் ஏராளமான வீடுகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருக்க வேண்டிய நிலை உருவானது . இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து வெளியே வர முடியாத படி தமிழக கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிக்கிக்கொண்டார்.

அமைச்சரை தொடர்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டது. மின் வெட்டு மற்றும் வெள்ளத்தில் சிக்கியதால் வெளியே வர முடியாத நிலை உருவானது. இதனையடுத்து சுமார் 3 நாட்களுக்கு பிறகு அமைச்சரை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ் குமார் உத்தரவையடுத்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படையினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மீட்டு லாரியில் அழைத்து வந்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal