எடப்பாடி பழனிசாமியின் கோட்டையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஓட்டை போட்டு, அ.தி.மு.க.வினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கெடுத்திருக்கிறார்.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக மற்றும் அண்ணா, ஜெயலலிதாவை தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதனையடுத்து பொறுமை இழந்த இபிஎஸ் அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இதனையடுத்து பாஜக முக்கிய பிரமுகர்களை எடப்பாடி பழனிசாமி தட்டித்தூக்கி அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் இபிஎஸ் கூறிவருகிறார்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வெங்கடாசலத்தை பாஜக தட்டித்தூக்கியுள்ளது. இந்த இணைப்பு நிகழ்ச்சி தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம் மற்றும் கரு.நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில், வெங்கடாசலம் மற்றும் அவருடன் பாஜகவில் இணைந்துள்ள அனைவரையும் மனதார வரவேற்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலத்தை வரவேற்று அண்ணாமலை வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- ‘‘சேலம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், ஐம்பதாண்டு காலமாக தமிழக அரசியல் தளத்தில் செயல்பட்டு வருபவருமான, வெங்கடாசலம் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீது கொண்டுள்ள ஈர்ப்பால், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் ரிறி ராமலிங்கம் மற்றும் கரு நாகராஜன் ஆகியோர் முன்னிலையில், தமது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்துள்ளார்.
வெங்கடாசலம் மற்றும் அவருடன் பாஜகவில் இணைந்துள்ள அனைவரையும் மனதார வரவேற்று மகிழ்வதோடு, தூயதோர் அரசியலை முன்னெடுக்கும் தமிழக பாஜக செயல்பாடுகளில், அவர்கள் ஆழ்ந்த அரசியல் அனுபவத்தையும், பங்களிப்பையும் கோருகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.