பாராளுமன்றத்தில்  டிசம்பர் 13 அன்று புதிய கட்டிடத்தில் மக்களவை அலுவல்கள் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து 2 பேர் அவையில் குதித்தனர். ஒருவர் கோஷமிட்டு கொண்டே உடலில் மறைத்து வைத்திருந்த புகை குப்பியை வீசினார். இதில் மஞ்சள் நிற புகை வெளிக்கிளம்பி பல எம்.பி.க்களின் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. அவைக்கு வெளியே பாராளுமன்ற வளாகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இதே போன்று கோஷமிட்டு, வர்ண புகை குப்பிகளை வீசினர். நால்வரையும் கைது செய்துள்ள டெல்லி காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

இச்சம்பவம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்றும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அவையில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் எதிர்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர். ஆனால், அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்களில் 47 எம்.பி.க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இந்நிலையில் ஆளும் பா.ஜ.க.வை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்திருப்பதாவது:- பாதுகாப்பு குறைபாடு காரணமாக மர்ம நபர்கள் பாராளுமன்றத்தையே தாக்க துணிந்தனர்.

ஆனால், மோடி பாராளுமன்றத்தையும் ஜனநாயக மாண்புகளையும் தாக்குகிறார். 47 பாராளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததன் மூலம் அனைத்து ஜனநாயக மாண்புகளையும் மோடி குப்பை தொட்டிக்குள் போட்டு விட்டார். எங்களுக்கு 2 கோரிக்கைகள்தான்: பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது மன்னிக்க முடியாதது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும். மற்றொன்று, இச்சம்பவம் குறித்த ஆழமான விவாதம் நடைபெற்றே ஆக வேண்டும்.

அச்சு ஊடகத்தில் பிரதமர் பேட்டியளிக்கிறார்; தொலைக்காட்சி சேனல்களில் உள்துறை அமைச்சர் பேட்டி அளிக்கிறார். ஆனால், இந்திய மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான பாராளுமன்றத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து இருவரும் தவறி, பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள். இதன் மூலம் எதிர்கட்சிகள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்கி, எதிர்ப்பு குரல்களை நசுக்கி, அவர்கள் விரும்பும் வகையில் அவர்கள் கொண்டு வர துடிக்கும் சட்டங்களை எந்த வித விவாதங்களோ எதிர்ப்புகளோ இல்லாமல் எளிதாக கொண்டு வர முடியும்.

இவ்வாறு கார்கே குற்றம் சாட்டினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal