அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனையிட்ட தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கு எதிராக அமலாக்கத் துறையினர் 2-வது முறையாக புகார் அளித்துள்ளனர். இதை டிஜிபிக்கு நினைவூட்டல் கடிதமாக அனுப்பி வைத்துள்ளனர்.

மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றியவர் அங்கித் திவாரி. இவர், திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை மீண்டும் விசாரிக்காமல் தவிர்க்க, ஏற்கெனவே ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற நிலையில், மீண்டும் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திவாரியை இந்த மாதம் 1-ம் தேதி கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, அங்கித் திவாரி பணியாற்றிய மதுரை தபால் தந்தி நகரிலுள்ள அமலாக்கத் துறை துணை மண்டல அலுவலகத்தில் அன்று மாலை முதல் மறுநாள் காலை 7 மணி வரையிலும் விடிய, விடிய மதுரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அங்கித் திவாரி அறையில் இருந்து சில ஆவணங்களும், அவரது வீட்டில் நடந்த சோதனையில் லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர் பிரிஜிஸ்ட் பெனிவால் என்பவர் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடந்த 2-ம் தேதி புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதையொட்டி, டிசம்பர் 1-ம் தேதி சீருடையின்றி இருவர் வந்தனர். இதைத்தொடர்ந்து சுமார் 35-க்கும் மேற்பட்டோர் எங்களது அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களில் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் மட்டும் தன்னை அறிமுகப்படுத்தினார். மற்றவர்கள் சீருடை அணியவில்லை. அவர்கள் அன்கித் திவாரி அறைக்குள் நுழைந்து, சோதனை என்ற பெயரில் பல மணி நேரம் இருந்தனர். அங்கு இருந்த சில ஆவணங்களை அவர்களுக்கு தேவையின்றி திருடிச் சென்றுள்ளனர். வழக்குக்கு சம்பந்தமில்லாத ஆவணங்களையும் கைப்பற்றி சென்றுள்ளனர்.

மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் என்ற போர்வையில் உரிய அனுமதியின்றி மிகவும் ரகசியமான ஆவணங்களை திருடிய 35 நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது வரை அமலாக்கத்துறை புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மாறாக எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக காவல்துறை சார்பில் அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அமலாக்கத் துறையினர் தமிழக டிஜிபிக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதுமட்டும் அல்லாமல் கடந்த 2-ம் தேதி அனுப்பிய புகார் கடிதத்தில் தெரிவித்தது போன்று சம்பந்தப்பட்ட தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு டிஜிபிக்கு நினைவூட்டலாக 2-வது கடிதத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனையிட்ட தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கு எதிராக அமலாக்கத் துறையினர் 2-வது முறையாக புகார் அளித்துள்ளனர். இதை டிஜிபிக்கு நினைவூட்டல் கடிதமாக அனுப்பி வைத்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal