‘அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு’ ஒன்றை ஓ.பி.எஸ். உருவாக்கியிருப்பதுதான் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் கொடி, பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் ஓ.பி.எஸ். பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், அதிமுக பெயர் கொடி, சின்னங்களை பயன்படுத்த ஓ.பி.எஸ். தரப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தீர்ப்பு வரும் வரை ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வின் கொடி, பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தமாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார். இந்த உத்தரவின்படி, ஓ.பி.எஸ். நவம்பர் 18 ஆம் தேதி சட்டமன்றத்திற்கு வந்த போது அ.தி.மு.க. கரை வேட்டியை உடுத்தாமல் காவி வேட்டியை அணிந்து வந்தார்.

இந்நிலையில், இன்று ஓ.பி.எஸ். சென்னை எழும்பூரில் காலை 10 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டார்கள். இந்தக் கூட்டத்திலும் ஓ.பி.எஸ். காவி வேட்டி அணிந்து கொண்டு பங்கேற்றார். அதேபோல் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கரை வேட்டியை உடுத்தி இருந்தனர். இந்தக் கூட்டத்தில் அவரது ஆதரவாளர்களும், நிர்வாகிகளும், ஓ. பன்னீர் செல்வத்திற்கு மாலை அணிவித்து வீரவாள் பரிசாக வழங்கினார்கள்.

இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ். எடுக்கப்போகும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஓபிஎஸ் தனிக் கட்சி தொடங்கப்போவதாகவும் அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், ஜனவரி 6 ஆம் தேதி கோவை நடத்தப்பட இருக்கும் மாநாடு ஏற்பாடுகள் குறித்து அவர் நிர்வாகிகள் ஆலோசித்து இருக்கிறார். அத்துடன் இந்த கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற குழுவை தொடங்கிய ஓ பன்னீர்செல்வம் தனியாக கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்து உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal