எம்.ஜி.ஆர். நினைவுநாளில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதற்கு டாக்டர் சரவணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டநிலையில், கலைஞர் நூற்றாண்டு விழா தேதி மாற்றப்பட்டது.
இந்த நிலையில்தான், ‘டிசம்பர் 24 ஆம் தேதி இரவு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும் நிலையில், கிறிஸ்துவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் திமுக இளைஞரணி மாநாட்டை அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது’ என அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் சரவணன் அறிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘உலகெங்கிலும் கிறிஸ்துவ சிறுபான்மை மக்கள் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடும் நேரத்தில் திமுக இளைஞரணி மாநாடா? மேடையில் நான் கிறிஸ்தவன் என்று முழங்கினாரே உதயநிதி, அது வெறும் நடிப்பா? பல லட்சம் இளைஞர்களை திரட்ட பல்வேறு வழிகளில் முஸ்தீப்புகளை திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஏற்பாடு செய்து வருகிறார்.
டிசம்பர் 24 ஆம் தேதி இரவு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும் நிலையில் அன்றைய தினம் சிறுபான்மை மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் திமுக இளைஞரணி மாநாட்டை அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது. கிறிஸ்துவ மக்கள் இதனால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் கிறிஸ்துவ பெருமக்களின் அழைப்பின் பேரில் கோவையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தவர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
கிறிஸ்துவ சிறுபான்மை மக்களுக்கு அதிமுக ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை எடுத்துரைத்தார். திமுகவின் வஞ்சக கொள்கையையும் வெளிப்படுத்தினார். சிறுபான்மை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறியதும் சிறுபான்மை இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்களின் ஆதரவு அதிமுகவுக்கு பெருகி வருகிறது.
ஆனால் மூச்சுக்கு முண்ணூறு தடவை சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள் எனப் பேசி நாடகமாடிய திமுக, அவர்கள் கொண்டாடும் விழாவை கொச்சைப்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே வேறு நாளில் திமுக இளைஞர் அணி மாநாடு நடத்திக் கொள்ளுமாறு கழக மருத்துவ அணி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று அதில் கூறியிருக்கிறார்.