கலைஞர் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்காக தனுஷ், நயன்தாரா, சாய் பல்லவி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் காலம் கடந்து கொண்டாடப்படும் பல்வேறு படைப்புகளை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அவரின் கலைப் பயணத்தை கொண்டாடும் வகையில் தமிழ் திரைப்பட சங்கங்கள் அனைத்தும் இணைந்து அவருக்கு நூற்றாண்டு விழா ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அந்த விழாவுக்கு கலைஞர் 100 என பெயரிட்டு அதனை முதலில் டிசம்பர் 24-ந் தேதி நடத்த திட்டமிட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
பின்னர் அன்றைய தினம் எம்ஜிஆரின் நினைவு நாள் என்பதால் அன்று அந்த விழாவை நடத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து கலைஞர் 100 விழா ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி வருகிற ஜனவரி 6-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த விழா நடைபெறும் என்று அறிவித்ததோடு, ஜனவரி 5 மற்றும் 6-ந் தேதிகளில் தமிழ் படங்களின் படப்பிடிப்புகளை நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தி இருந்தது. இந்த விழாவுக்காக பிரபலங்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் மேலும் சில பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி நடிகர் தனுஷை நேரில் சந்தித்து அவருக்கு சினிமா சங்கத்தினர் கலைஞர் 100 விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அப்போது அவர்கள் தனுஷுடன் சேர்ந்து கலந்துரையாடிய போது எடுத்த புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகின்றன.
இதையடுத்து நடிகை நயன்தாராவை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து அவருக்கு கலைஞர் 100 விழாவுக்கான அழைப்பிதழையும் வழங்கி இருக்கின்றனர். அவர் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வரும் நிலையில், அப்பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் எஸ்.கே.21 படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற சினிமா சங்கத்தினர் அங்கு அப்படத்தின் நாயகி சாய் பல்லவி மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரை சந்தித்து கலைஞர் 100 விழாவுக்கு அழைப்பு விடுத்தனர்.