தமிழகத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் முதல்வரும், ஆளுநரும் நாளை கோவைக்கு ஒரே விமானத்தில் பயணிப்பதுதான் அரசியல் களத்தில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருப்பது உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளையும் கேட்டிருந்தது.
இதனையடுத்து நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக முதல்வருடன் பேசி ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் தமிழ்நாட்டிற்கு வந்தபிறகு பல முறை அவரை நான் சந்தித்து இருக்கிறேன். பேசி இருக்கிறேன். அரசு விழாக்களிலும் பல முறை இருவரும் பங்கெடுத்து இருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் இனிமையாகத்தான் பழகினார் – பேசினார். எனவே, நாங்கள் இருவரும் சந்திப்பது அல்ல பிரச்சினை. ஆளுநர் மனம் மாறித் தமிழ்நாட்டின் நன்மைக்காகச் செயல்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டு மக்களுக்கும், சிந்தனைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான சில சக்திகளின் கைப்பாவையாக அவர் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கோவைக்கு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஒரே விமானத்தில் செல்கின்றனர். கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்க செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கோவை செல்லும் ஆளுநர் அங்கிருந்து திருச்செங்கோடு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறார்.
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் முதல்வரை ஆளுநர் அழைத்திருந்த நிலையில் இருவருமே ஒரே விமானத்தில் கோவை செல்வது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெல்லியில் வரும் 19-ந் தேதி நடைபெறும் “இந்தியா” கூட்டணி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியும் நாளை மறுநாள் உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் பங்கேற்க செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.