மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஜனவரி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. சுமார் 55 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. பல இடங்களில் இந்த திட்டத்திற்கு குடும்ப தலைவிகள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் தங்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையென புகாரும் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு அக்டோபர் 25ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதில் 11 லட்சத்து 85 ஆயிரம் நபர்கள் மேல்முறையீடு செய்தனர். இதில், 7.35 லட்சம் பயனானிகள் சேர்க்கப்பட்டு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியிருந்தும் விடுபட்டவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஜனவரி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal