தி.மு.க. இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் வருகிற 24ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் உருவாக்கிய பாடல் வரிகள்தான் தி.மு.க.வின் மேடைகள்தோறும் தற்போது ஒலித்து வருகிறது.

தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளராக இருந்த மு.க.ஸ்டாலின் தற்போது முதலமைச்சராக இருக்கிறார். தற்போது இளைஞரணியின் மாநிலச் செயலாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின்தான், நாளை திராவிட இயக்கத்தின் நம்பிக்கை என கட்சியின் சீனியர்கள் முதல் இளைஞரணியினர் ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்தான் தி.மு.க.வின் இளைஞரணி மாநாட்டிற்காக, தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் எழுதிய பாடலில் உள்ள வலிமையான, எழுச்சி வரிகள்தான்.. தி.மு.க. இளைஞரணியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அந்தப் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் தி.மு.க.வில் உள்ள அடிமட்டத் தொண்டர்களை உணர்ச்சிப் பூர்வமாக உற்சாகம் அடைய வைத்திருக்கிறது. இந்த பாடலில் அவரை தலைவராகவே படம் பிடித்து காட்ட படுகிறது. அந்த பாடல் வரிகள்…

‘‘உதயநிதி ஸ்டாலின் எங்கள் அண்ணா
இளைஞரணி வாழ்த்தும் இமயம் அண்ணா
உயிரான இளம் தலைவர் எங்கள் அண்ணா
உடன்பிறப்பைக் காக்கும் அன்பு அண்ணா!

பகை நடுங்கிட படை திரட்டி
அண்ணன் வருகிறார்
இளைஞரணி பாசறையின் மன்னன் வருகிறார்!

வரிப்புலியென இடி முழங்கிட
அண்ணன் வந்தார்
சிறுநரிகளை சிதறடித்திட சீற்றம் கொண்டார்!

திராவிடத்தை காத்திடும் எம் மாமன்னனே
திசைகள் போற்றும் இரும்பு இளைஞனே!

பாசிசத்தை வேரறுக்கும் மாவீரனே
பாசமிகு படை நடத்தும் இளம் தலைவனே!

கலைஞர் கட்டிக்காத்தக் கழகமடா இது
அஞ்சாத உடன் பிறப்பின் இயக்கமடா!

தங்கத் தலைவர் ஸ்டாலின் தலைமையடா & அவர் தந்தார் நமக்கு விடியலடா!

நாளைய நம்பிக்கை உதயநிதி
நம்நாடு போற்றும் தலைவரடா
நாயகர் கலைஞரின் கழகக் கொடி
தமிழ் மண் காக்க நம்கையில் தந்தாரடா!

அண்ணன் உதயநிதி என்றால் பகை நடுங்கி ஓடும்
எங்கள் இளம் தலைவர் சென்றால்
களம் வெற்றி காணும்!

ஒற்றைச் செங்கல் காட்டி
அதிர வைத்தாய்
ஓநாய்கள் கூட்டத்தை
சிதறடித்தாய்!

எட்டுத் திக்கும் உந்தன்
இடி முழக்கம்
எப்போதும் உன் பேச்சில்
அனல் பறக்கும்!

கோட்டையை ஆளப் பிறந்தவனே
கோபாலபுரத்தில் வளர்ந்தவனே
கோடானு கோடி தமிழர்களும்
கொண்டாம் நம்பிக்கை நாயகனே!

தாய்க்குலமே வாழ்த்தும்
தமிழ்மகனும் நீதான்
தமிழகமே போற்றும்
அன்பகமும் நீதான்..!’’ என்பதுதான் பாடல் வரிகள்!

திராவிட இயக்கத்தை உருவாக்கியவர் அண்ணா, அதை கட்டிக்காத்தவர் கலைஞர், இன்று வழிநடத்திக்கொண்டிருப்பவர் முதல்வர் ஸ்டாலின், அண்ணாவின் வழியில் திராவிட இயக்கத்தை அடுத்து வழிநடத்துபவர் உதயநிதி என்பதைத்தான் ‘எங்கள் அண்ணா’ பாடல்வரிகள் சூசகமாக உணர்த்துகிறது.

தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்காக தூத்துக்குடி எஸ்.ஜோயல் உருவாக்கிய பாடல் வரிகளை பார்க்கின்ற போது…

புத்தாண்டில் உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் துணை முதல்வராக பொறுப்பேற்பார் என்ற உற்சாகத்தில் இருக்கிறார்கள் உடன்பிறப்புக்களும், இளைஞர் அணியினரும்…!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal