தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டாகவே தலைவர் பதவிக்காக பலர் டெல்லியில் போராடி ஓய்ந்து விட்டார்கள். இதில் தொடர்ந்து தீவிரமாக இருப்பவர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. எனக்கு தலைவர் பதவி மீது நீண்ட நாள் ஆசை. எனக்கு தலைவர் பதவியை கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன். கட்சியையும் வளர்த்து காட்டுவேன் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார். அவருக்கு ஆதரவாக அவரது தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரமும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 11-ந்தேதி டெல்லியில் பிரியங்கா காந்தியையும் கார்த்தி ப.சிதம்பரம் சந்தித்து பேசியிருக்கிறார். அவரிடமும் தலைவர் பதவி மீதான தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார். தனக்கு எம்.பி. பதவியும் வேண்டாம். வேறு எந்த பதவியும் வேண்டாம். தலைவர் பதவி மட்டும் போதும். அது தனது நீண்ட நாள் ஆசை என்பதையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரையும் சந்தித்து பேசி இருக்கிறார். மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில், 2026 சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பக்கபலமாக நின்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயார் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.

எனவே கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டால் தனக்குத்தான் தலைவர் பதவி
என்று தனது ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கேட்டபோது, தலைவரை நியமிப்பதற்கு முன்பு சில நடைமுறைகளை கட்சி மேலிடம் செய்யும். அதாவது தமிழகம் உள்பட சில மாநிலங்களுக்கு இன்னும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. முதலில் பொறுப்பாளரை நியமிப்பார்கள். அவர் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் பெயர் பட்டியலை தயார் செய்து மேலிடத்துக்கு வழங்குவார்.

அதை வைத்து தான் புதிய தலைவரை தேர்வு செய்வார்கள். இதற்கிடையில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த 4 மாநிலங்களிலும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்களை தேர்வு செய்து அறிவிக்க வேண்டியது உள்ளது. எனவே இன்னும் நிறைய காலஅவகாசம் எடுப்பார்கள். அதற்குள் பாராளுமன்ற தேர்தல் வேறு நெருங்கி வருகிறது. எனவே டெல்லி மேலிடம்தான் முடிவு செய்யும் என்றார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal