2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை கேட்போம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மூர்த்தி, புரட்சி பாரதம் கட்சி சார்பில் வரும் 20 ஆம் தேதி மனிதம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடத்தவுள்ளதாகவும், மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்தார்.

புரட்சி பாரதம் கட்சி தற்போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிப்போம் என கூறினார்.

2015 பெரு வெள்ளத்தை அதிமுக அரசு சிறப்பாக கையாண்டதாகவும், இரண்டு நாள் மழைக்கே சென்னை தத்தளித்ததாக கூறிய அவர், மழை நீர் வடிகால் பணிகளுக்காக திமுக அரசு செலவிட்ட தொகை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் அரசு அறிவித்த 6 ஆயிரம் நிவாரண தொகையை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal