108 வைணவ திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் இன்று காலை ரங்கநாதரை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். அப்போது பக்தி பரவசத்தில் மூலஸ்தானத்தில் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை வழிபாடு செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரவி, கோவில் பாதுகாப்பு ஊழியர்கள் 3 பேர் இங்கு கோவிந்தா கோவிந்தா என கோஷம் செய்யக்கூடாது என கூறியுள்ளனர்.

ஆனால் நாங்கள் பெருமாளை தரிசனம் செய்யும் போது கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு தான் தரிசனம் செய்வோம் என கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த கோவில் ஊழியர்கள் 3 பேர் ஐயப்ப பக்தர்களை தாக்கியுள்ளனர். இதில், ஒரு ஐயப்ப பக்தர்கள் படுகாயமடைந்துள்ளார். இதனை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் ரத்தம் சொட்ட சொட்ட போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தை அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்கள் பக்தர்களை சமாதானம் செய்யும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வெளிமாநில பக்தர்கள் மீது 3 செக்யூரிட்டிகள், ஒரு காவலர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவில் மூடப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal