அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கையும் களவுமாக பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருந்து டாக்டர் சுரேஷ் பாபுவை விடுதலை செய்ய ரூ.3 கோடி லஞ்சம் தர வேண்டும் என்று அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கேட்டு இருக்கிறார். . இதனால் டாக்டர் சுரேஷ் பாபு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதன்பேரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அங்கித் திவாரியிடம் கொடுக்க சுரேஷ் பாபுவுக்கு அறுவுறுத்தியுள்ளனர். இதன்படியே ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அங்கித் திவாரியிடம் பல மணி நேரமாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறையின் மண்டல அலுவலக அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிபுத்த்துறை போலீசார் சோதனை நடத்தினர். அதாவது டிச.1-ம் தேதி மாலை 6 மணியளவில் தொடங்கிய சோதனை, விடிய விடிய நடந்தது. 13 மணி நேர சோதனை நடைபெற்று டிச.2ம் தேதி காலை 7 மணிக்கு முடிவடைந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை காரணமாக 100-க்கும் மேற்பட்ட தமிழக போலீஸாரும், 50-க்கும் மேற்பட்ட இந்தோ-திபெத்தியன் பாதுகாப்புப் படையினரும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அமலாக்கத்துறை அலுவலகமே பரபரப்பாக காட்சி அளித்தது. லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், அங்கித் திவாரியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அங்கித் திவாரியை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் எனக் கூறப்படுகிறது. அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற வழக்கில் வேறு அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரிக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை கூறியிருந்த நிலையில், இது தொடர்பாகவும் அங்கித் திவாரியிடம் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal