தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அண்ணனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்ததை கேள்விப்பட்டு, பதறியடித்து முதல்வர் மருத்துவமனையில் நலம் விசாரித்திருக்கிறார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு 36 வயதாகிறது.. இவர் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டதாக தகவல் வெளியானது. இதனால், சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அடுத்தடுத்த சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, அடுத்த சில நாட்களுக்கு துரை தயாநிதிக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரை தயாநிதியை, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். துரைக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.. பிறகு, அண்ணன் அழகிரியிடமும் இதை பற்றி விசாரித்துள்ளார்.
துரை தயாநிதி சென்னை வீட்டில் இருந்தபோது, நேற்று மதியம் திடீரென மயங்கி விழுந்துள்ளார்… இதைப்பார்த்து பதறிப்போன குடும்பத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சில டெஸ்ட்கள் எடுக்கப்பட்டதாகவும், அந்த மருத்துவ பரிசோதனை முடிவில், அவருக்கு மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், மூளை பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்தன.
அதாவது, மூளைக்கு செல்லும் ரத்த நரம்புகளில் அடைப்பு இருப்பதால், இதை பிரைன் அட்டாக் என்று சொல்லப்படுகிறது.. ஆனால், இதுகுறித்த உண்மை நிலவரம் தெரியவில்லை. துரை தயாநிதிக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையும் இன்னும் வெளிவரவில்லை. அப்படி வெளிவந்தால் மட்டுமே அவருக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து உறுதியாக தெரியவரும்.
நேற்றைய தினம், மதுரை தயாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து, மதுரையில் இருந்த அழகிரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகுதான், மதுரையில் இருந்து அவர் கிளம்பி வந்துள்ளார்.. நேற்று மயங்கி விழுவதற்கு முன்புவரை, சென்னையில் வெள்ளம் தொடர்பான ட்வீட்டுக்கு, துரை தயாநிதி ரீட்வீட்களை செய்துள்ளார். அத்துடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் செய்து கொண்டிருந்தார். அப்போதுதான், திடீரென மயங்கி விழுந்துள்ளதாக சொல்கிறார்கள்.