கடந்த திங்கட்கிழமை அன்று கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்று வந்த தனியார் கட்டுமான பகுதியில் சுமார் 50 அடிக்கும் அதிகமாக திடீர் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர் மற்றும் ஜே.சி.பி. இயந்திரமும் விழுந்ததாக கூறப்பட்டது. இதில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த சிலர் சிக்கிக் கொண்டனர். கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஜெயசீலன் கண்டெய்னர் உடன் தண்ணீருக்குள் மூழ்கினார். இவருடன் மேலும் சிலர் மூழ்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. பெரும் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஜெயசீலன் மற்றும் சிலரை மீட்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களில் ஒருவரான நரேஷ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விபத்தில் சிக்கிய மற்றவரின் உடலை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தின் மீட்பு பணிகளில் எல் அண்ட் டி, தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மீட்புப்பணி நடைபெற்று வரும் இடத்தில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்டுமான நிறுவனம் என்ன பணிகளை இங்கே மேற்கொண்டு வந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது. இதனை அடுத்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளத்தில் மூழ்கியவரை மீட்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. மேற்பார்வையாளராக பணியாற்றிய ஜெயசீலன் உடலை மீட்கும் பணி நடைபெறுகிறது.
மண் சரிவு இருப்பதால் மீட்பு பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்படுகிறது. முதலமைச்சர் தினசரியும் மீட்பு பணிகள் குறித்து விசாரிக்கிறார். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal