சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு புதன்கிழமை ஆஜரான வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் ஒரு முறையீடு செய்தார். சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கடந்த 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளில் 190 பேர் உயிரிழந்த நிலையில், நான் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

அந்த வழக்கையே, தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையிட்டார்.

இந்த முறையீட்டைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க மறுத்து, முறையாக மனு தாக்கல் செய்தால், ஜனவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal