தூத்துக்குடி தொகுதிக்கு எம்.பி.யாக இருந்தாலும், சென்னையில் தத்தளிக்கும் மக்களுக்கு மிகுந்த கனிவோடு கனிமொழி எம்.பி., அவர்கள் உணவு கொடுத்து பசியாற்றி வருவதுதான், பாதிக்கப்பட்ட மக்களை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உணவு கிடைக்காமல் சிரமப்படுவோருக்காக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. நேற்று காலை முதலே 3 பெரிய தேக்ஸாக்களில் வெரைட்டி ரைஸ்கள் சமைக்கப்பட்டு வேனில் எடுத்துச்செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகின்றன. கனிமொழி எம்.பி.யின் சொந்த செலவில், தனிப்பட்ட முயற்சியில் இது முன்னெடுக்கப்படுகிறது. நேற்றை போலவே இன்றும் கனிமொழி எம்.பி.யின் சிஐடி காலணி இல்லத்தில் பிரத்யேகமாக வெரைட்டி ரைஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஏனோ தானோ என பெயருக்கு இல்லாமல் கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், என சத்தான காய்கறிகளை கொண்டு உணவு சமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அரசும், மாநகராட்சியும் உணவு விநியோகம் செய்தாலும் கூட அவர்களுக்கு உறுதுணையாக கனிமொழியும் தனது பங்களிப்பை செய்து வருகிறார்.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள கனிமொழி, சென்னை மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தொடர்ந்து தனது அலுவலக பணியாளர்களிடம் கேட்டறிந்து வருவதுடன் உணவு விநியோகிக்குமாறும் அறிவுறுத்தியிருக்கிறார்.

கனிமொழியை பொறுத்தவரை அவர் சென்னையில் எந்த மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடப்போவதில்லை. அவர் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினராக இருக்கிறார். வரும் தேர்தலிலும் தூத்துக்குடியில் தான் மீண்டும் களம் இறங்கப் போகிறார்.

அப்படியிருந்தும் சென்னை மக்கள் வெள்ளத்துயரில் தத்தளிக்கிறார்கள் என்பதை அறிந்து உணவு சமைத்து விநியோகம் செய்து வருகிறார். சென்னையை பொறுத்தவரை இப்போது தான் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. நேற்றுக்கு இன்று பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது. நாளை இன்னும் முன்னேற்றம் தென்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனிமொழியின் சிஐடி காலணி இல்லம் அமைந்துள்ள பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்திருந்தது. ஆனால் அதற்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது வீட்டிலேயே சாப்பாடு சமைத்து வழங்கி கவனம் ஈர்த்திருக்கிறார் கனிமொழி.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal