கருணாநிதி நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர். நினைவுநாளில் எடுப்பது மிகவும் தவறானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட அ.தி.மு.க.வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வின் மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி என மக்கள் மனதில் என்றைக்கும் நிலையாய் நிலைத்திருப்பவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
இந்திய துணைக் கண்டத்திலேயே சினிமா துறையில் பல வெற்றி கண்டது மட்டுமல்லாது, ஒரு மனிதன் எப்படி ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதனை தனது திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு விளக்கினார். தனது திரைப்படங்கள் மூலம் திராவிட சித்தாந்தத்தை மக்களிடத்தில் எடுத்துக்கூறி, பேரறிஞர் அண்ணா தமிழகத்தின் முதலமைச்சராக ஆவதற்கு புரட்சித் தலைவர் கலைப்பயணம் உறுதுணையாக இருந்தது.
சினிமா துறையைச் சார்ந்த நலிந்தோறுக்கு ஏராளமான உதவிகளை வாரி வழங்கியவர் எம்.ஜி.ஆர். கலைத்துறையைச் சேந்தவர்களுக்கு பல்வேறு அரசு பதவிகள், விருதுகள் என வழங்கியவர். மேலும் 11 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்து மக்களுக்காகவே தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்தவர் புரட்சித் தலைவர்.
காலங்கள் கடந்தாலும் மக்களின் மனதில் புரட்சித் தலைவர் தெய்வமாக வாழ்ந்து வருகிறார். ஆண்டுதோறும் டிசம்பர் 24ம் தேதி எந்த மக்களும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட மனித புனிதர் புரட்சித் தலைவ்ர எம்.ஜி.ஆர். நினைவுநாள் வருகின்ற 24ம் தேதி வருகிறது.
அன்றைய தினம் உதயநிதி ஸ்டாலினின் நிர்பந்தத்தின் பேரில் திரையுலகம் ‘கருணாநிதி 100’ என்று பிரம்மாண்டமான விழாவை சேப்பாக்கத்தில் நடத்துகிறது. இதில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சினிமா பிரபரலங்களும் கலந்துகொள்வதாக செய்திகள் வருகின்றன.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்தவேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், புரட்சித் தலைவர் நினைவுநாளில் நடத்துவதுதான் அநாகரீகமான செயல், இது வேதனையாக உள்ளது. மேலும் திரையுலகைச் சார்ந்த முக்கிய நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் உள்ளார். இந்த சமயத்தில் இது தேவையா? என சினிமா பிரபலங்களைச் சாந்தவர்களே கேள்வி எழுப்புகின்றனர்.
புரட்சித் தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் காலங்களில் சினிமா துறை சுதந்திரமாக செயல்பட்டது. ஆனால், இன்றைக்கு எப்படி இருக்கிறது?’’ என அவரது அறிக்கை நீள்கிறது. மேலும், அவர் ‘‘கலைஞர் நினைவுநாளில் இதுபோன்ற விழாக்கை நடத்தினால் தி.மு.க.வினரில் மனநிலை எப்படி இருக்கும்’’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் டாக்டர் சரவணன்.