வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுப்பெற்று டிசம்பர் 3-ல் புயலாக உருவாகி டிசம்பர் 4 ஆம் தேதி மாலை சென்னை &- ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட அண்மை அறிக்கையில். ‘‘அந்தமான் அருகே உருவாகி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையிலிருந்து 800 கிலோமீட்டர், புதுசேரியிலிருந்து 700 கி.மீ கிழக்கே மையம் கொண்டிருக்கிறது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகரும். டிச.3-ல் புயலாக வலுப்பெற்று டிச.4-ல் தமிழகம் & – ஆந்திரா இடையே கரையைக் கடக்கும்’’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் உருவாகும் பட்சத்தில் இதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்படும். மியன்மர் நாடு வழங்கும் இந்தப் பெயர் அந்நாட்டில் பாயும் ஒரு நதியின் பெயர் ஆகும்.

இதற்கிடையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழையும், டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று (வெள்ளி) மதியம் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புதுச்சேரி துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை,எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, தூத்துக்குடி,பாம்பன் உள்பட பல்வேறு துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதால் மீனவர்கள் வங்கக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal