அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வம் அணிக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் பயன்படுத்த ஓ.பி.எஸ்சுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி தாக்கல் செய்திருந்த வழக்கு, நீதிபதி சதீஷ்குமார் முன் நேற்று மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது, இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் நிலை என்ன என்று நீதிபதி சதீஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், அதில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை இங்கு வழக்கை ஒத்திவைக்கலாம் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், தீர்ப்பு வரவில்லை என்றால், இந்த வழக்கில் வாதத்தை தொடங்கலாம். விசாரணையை தள்ளிவைப்பதாக இருந்தால் ஓபிஎஸ்சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும் என்றார்.

இதற்கு ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, தடை உத்தரவை நீட்டிக்க மறுத்து, விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, தடை உத்தரவை மீறக் கூடாது என்று ஓபிஎஸ் தரப்புக்கும், மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரும்படி எடப்பாடி தரப்புக்கும் அறிவுறுத்தினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal