தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 27ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வலுவடைந்து வரும் 3ம் தேதி புயலாக உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மிச்சாங் புயல்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் 4-ந்தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே நோக்கி வந்தடையும். வட தமிழகத்தை நோக்கி புயல் வருவதை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே வீடுகளிலும், சாலைகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதற்கிடையே, முதலமைச்சர் தலைமையில் இதுதொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” சென்னையில் மழை நீர் வடிந்து வருவதாக” தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாகத் தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது. விரைவாகச் செயல்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மழை தொடர்பான புகார்களுக்குச் சென்னை மக்கள் 1913, 04425619204, 04425619206, 04425619207 ஆகிய எண்களிலும், 9445477205 எண் மூலம் வாட்சாப் வழியாகவும் உதவிகளைப் பெறலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.