செந்தில் பாலாஜியின் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் கேட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 28ஆம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தது. அதன்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

வழக்கு விசாரணையின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என அவரது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமின் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. “செந்திப் பாலாஜியின் உடல்நிலை பாதிப்பு குறித்து கூகுளில் தேடிப் பார்த்தேன். மருந்து எடுத்துக் கொண்டால் அது சரியாகி விடும். சரி செய்யக்கூடிய பிரச்சினைதான் அது. இன்று பைபாஸ் சிகிச்சை எல்லாம் அப்பென்டிக்ஸ் அறுவை சிகிச்சை போன்று சாதாரணமாகி விட்டது. எனவே, மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் தர முடியாது.” என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

இதையடுத்து, மருத்துவ ஜாமீன் மனுவை திரும்பப் பெற்று, வழக்கமான ஜாமீன் மனு தாக்கல் செய்ய செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்தது. அதற்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், வழக்கமான ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும், அங்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையில், மூளைக்கான எம்.ஆர்.ஐ பரிசோதனையில் வலதுபுறத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் முதுகெலும்பில் வீக்கம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவருக்கு பித்தப்பை கற்கள் இருப்பதாகவும், நாளடைவில் உணவு உட்கொள்வதை அது குறைக்கும் என்றும், இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் கால்சிய படிவு உள்ளதாகவும் அந்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal