சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அவரது தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமின் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
மேலும், வழக்கமான ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும், அங்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முகாந்திரம் இருப்பதாக திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சட்டவிரோத பண பரிமாற்ற சட்ட அடிப்படையில் சிறையில் இருக்கும் ஒருவர் ஜாமீன் வேண்டும் என்றால், எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்திற்கு நிரூபிக்க வகையில் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதேநேரம், அவருக்கு உடல்நிலை பாதிப்படைந்திருந்தால் அந்த விதி தளர்த்தப்படும். அதனால்தான் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் கேட்டோம். அது நீதிமன்றத்திற்கு திருப்தியாக இல்லை என்பதால் கீழ் நீதிமன்றங்களுக்கு சென்று முறையிட சொல்லியுள்ளார்கள்.” என்றார்.
“ஜாமீன் வழங்குவதற்கு முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் கருதியிருந்தால் டிஸ்மிஸ் செய்திருக்கலாம். ஆனால், அபப்டி செய்யாமல் ஜாமீன் வழங்க முகாந்திரம் இருப்பதால் கீழ் நீதிமன்றம் சென்று மெரிட்ஸ் படி கேட்க அறிவுறுத்தியுள்ளார்கள்.” எனவும் என்.ஆர்.இளங்கோ சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கு பொய்யான ஆதாரங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதனை மெரிட்ஸ் படி ஜாமீன் கேட்கும்போது தாக்கல் செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் விசாரணைக்கு தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய என்.ஆர்.இளங்கோ, திமுக அரசு மீது களங்கம் விளைவிக்கவே அமலாக்கத்துறையை ஏவி ஒன்றிய அரசு சோதனை நடத்துவதாக குற்றம் சாட்டினார். மணல் குவாரி விவகாரத்தில் போலி ஆதாரங்களை வைத்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மணல் குவாரி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்திருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை விசாரிக்க முடியும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படாதது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்..