முன்னாள் அமைச்சர் செல்வகணபதி சுடுகாட்டு கூரை மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 1991முதல் 1996ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த செல்வகணபதி 23 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம் செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த நவம்பர் 9ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், செல்வகணபதி மேல்முறையீடு வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தற்போது தி.மு.க.வில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal