தி.மு.க.வின் இளைஞரணி வாகனப் பேரணியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு வாகனத்தில் சென்றதுதான் இளைஞரணி நிர்வாகிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் மிக பிரம்மாண்டமாக தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு நடக்க இருக்கிறது. தி.மு.க. இளைஞரணி மாநாட்டை வெகுசிறப்பாக நடத்திட, அமைச்சரும் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறார்.

இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “மாநில உரிமை மீட்பு இரண்டாவது மாநில மாநாட்டிற்கான இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணியை” கடந்த 15 ஆம் தேதி கன்னியாகுமரியில் உள்ள – திருவள்ளுவர் சிலை முன்பாக தொடங்கி வைத்தார்.

இந்த இருசக்கர வாகனப் பேரணி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூர் தொகுதிக்கு வருகை தந்தது. அப்போது, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இருசக்ரக வாகன பேரணியில் வந்தவர்களுக்கு சிறப்பான வரவேற்பைக் கொடுத்து அசத்தியதோடு, அவரும் மிக எளிமையுடன் வாகனப் பேரணியில் கலந்துகொண்டதுதான் அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இரு சக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களை மாவட்ட எல்லையான ஜெயங்கொண்டம் ஒன்றியம், மேலணிகுழி கிராமத்தில் வரவேற்று ஜெயங்கொண்டம் ஙீ ரோடு, ஜெயங்கொண்டம் கடைவீதி தா.பழூர், சித்தமல்லி, வி.கைகாட்டி, கீழபழூர், அரியலூர் கடைவீதி வழியாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா அருகே கழகத்தின் பிரச்சார பீரங்கிகளாக சுற்றிவந்தது.

இந்த நிகழ்ச்சியில், உடன் கழக சட்டத்திட்ட திருத்தகுழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் ச.அ.பெருநர்கிள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராஜா, உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ‘குட்புக்’கில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal