தேர்தல் நன்கொடை பெற்றதில் முதலிடத்தில் தெலுங்கானா பி.ஆர்.எஸ். கட்சியும், இரண்டாம் இடத்தில் தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வும் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்களில் ஒன்றாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒன்றுதான் தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்குச் செல்லும் நிதியைச் சீர்திருத்தம் செய்யும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2018இல் இந்த பத்திரங்கள் அறிமுகப்படுத்தியது.

தேர்தல் நன்கொடைகளை வங்கிகள் நொட்வொர்க்கில் கொண்டு வரவே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட காலத்தில் வங்கிகள் மூலம் வங்கிகளில் இருந்து இந்தத் தேர்தல் பத்திரங்களை வாங்கி 15 நாட்களுக்குள் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக வழங்கலாம்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் யார் நன்கொடை அளித்தார்கள் என்பது குறித்த தகவல்களைக் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் பொதுவெளியில் அறிவிக்கத் தேவையில்லை. கடந்த 2018இல் இவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த முறையில் தான் நன்கொடைகளை வாங்கி வருகிறது. இதில் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது எல்லாம் தனிக்கதை.

இதற்கிடையே கடந்த 2022-&23 ஆண்டில் எந்தக் கட்சிக்கு அதிக நன்கொடை கிடைத்துள்ளது என்பது குறித்த தகவல்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் அதிக நன்கொடையைப் பெற்ற கட்சியாகத் தெலுங்கானாவில் உள்ள பிஆர்எஸ் கட்சி இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் பிஆர்எஸ் கட்சிக்கு 683 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. அதில் ரூ. 539 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ள நிலையில், ரூ.90 கோடி ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட் மூலமாகக் கிடைத்துள்ளது.

மேலும், சுமார் 64 கோடி ரூபாய் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடை மூலம் கிடைத்துள்ளது. அவை பெரும்பாலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் தலைவர்கள் மூலமாகவே கிடைத்துள்ளன. அங்குள்ள பல்வேறு அமைச்சர்கள். பிஆர்எஸ் அரசியல் தலைவர்கள் ரூ. 10 கோடி நன்கொடையாக அளித்துள்ளனர்.

கேசிஆர் கட்சிக்குப் பிறகு, இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தில் திமுக இருக்கிறது. 2022-&23 காலகட்டத்தில் 192.22 கோடி ரூபாயை திமுக நன்கொடையாகப் பெற்றுள்ளது. 2000க்கும் மேற்பட்டோர் திமுகவுக்கு நன்கொடை அளித்துள்ளனர். மேலும், இந்த 192.22 கோடி ரூபாயில் சுமார் 96% தேர்தல் பத்திரங்கள் மூலமாகவே கிடைத்துள்ளது. அடுத்து மூன்றாவது இடத்தில் ஆந்திராவில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வருகிறது. அவர்கள் இதைக் காலகட்டத்தில் ரூ.68 கோடி பெற்றுள்ளனர்.

இதுவரை, இரண்டு தேசிய கட்சிகள் மற்றும் 23 பிராந்திய கட்சிகளின் நன்கொடை விவகாரங்கள் மட்டுமே தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் உள்ளன. தேசிய கட்சிகளில், ஆம் ஆத்மி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் நன்கொடை விவகாரங்கள் மட்டுமே இருக்கிறது. மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும்போது அதை யார் அளித்தது என்பது குறித்த தகவல்களை வெளியிடப்பட வேண்டிய அவசியமில்லை. இருந்த போதிலும் பிஆர்எஸ், திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவை தாங்களாக முன்வந்து யார் தங்களுக்கு நன்கொடை அளித்தது என்ற தகவல்களைப் பகிர்ந்துள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal