நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்கும் நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும் என வாட்ஸ் அப்பில் பதிவு வெளியிட்ட நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நெல்லை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் திசையன்விளையில் இன்று நடைபெறுகிறது. இதில் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில் நாங்குநேரியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி அம்புரோஸ் என்பவர், கே.எஸ்.அழகிரி திசையன்விளை வரும் போது வெடி குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து வாட்ஸ் அப்பில் பதிவு போட்டிருக்கிறார். இது காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த அம்புரோஸ் மீது நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் அம்புரோசை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் வட்டார அளவில் கூட கோஷ்டிப்பூசல் எந்தளவுக்கு உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகிறது. நாங்குநேரி அம்புரோசை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனின் ஆதரவாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ரூபி மனோகரனுக்கும் கே.எஸ்.அழகிரிக்கும் ஏழாம் பொருத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியிலிருந்து கே.எஸ்.அழகிரியை நீக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தும் முக்கிய பிரமுகர்களில் ரூபி மனோகரனும் ஒருவர். இதனிடையே திசையன்விளையில் நடைபெறும் நெல்லை நாடாளுமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்படாத வகையில் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் கட்சிக்கு உள்ள பெரிய பின்னடைவே இந்த கோஷ்டிப் பூசல் தான். இதனால் தான் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தடுமாற வேண்டிய சூழல் நிலவுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal