சட்டவிரோத பணப்பரிசோதனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் அவர் திடீரென கடந்த 15 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 15 ஆம் தேதி புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மதிய உணவை உட்கொண்டார். அவருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. ஏற்கெனவே அவருக்கு கால் மரத்து போகும் பிரச்சினையும் இருந்து வந்தது. இதையடுத்து சிறைத் துறை மருத்துவர்களின் அறிவுரைபடி அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு இசிஜி பரிசோதனை எடுக்கப்பட்டு அதில் சீரற்ற நிலை இருந்ததால் மேல்சிகிச்சைக்காக அன்றைய தினமே ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். செந்தில் பாலாஜி உடல் மெலிந்து அவரால் நடக்க முடியாத அளவுக்கு இருக்கிறார். அவருக்கு கால் மரத்து போவதால் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதையடுத்து எம்ஆர்ஐ ஸ்கேனும் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு மூளையில் உள்ள நரம்பில் ரத்த அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால்தான் கால் மரத்து போகிறது என மருத்துவர்கள் தெரிவித்தார். அதே வேளையில் முதுகுத்தண்டுவடத்தில் வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, இன்று 6ஆவது நாளாக இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்களால், மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள பட உள்ளது. இது தவிர கழுத்து பகுதி சவ்வில் பாதிப்பு இருந்ததன் காரணமாக, நரம்பியல் துறை மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இதயவியல் துறையும் இந்த சிகிச்சையில் இணைந்துள்ளது.

அத்துடன் அவருக்கு கணையத்தில் இருக்கும் கொழுப்பு கட்டியை கரைப்பது குறித்து நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அவருடைய உடல்நல பிரச்சினைகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாமா அல்லது மருந்து மாத்திரை மூலமே குணப்படுத்திடலாமா என்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அவர் நடப்பதற்கு கூட சிரமப்படுவதால் வீல் சேரிலேயே அழைத்து செல்லப்படுகிறார் என்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal