நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க்ப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்த வருகிறார்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவுடன் இருந்த கூட்டணியை முறித்த இபிஎஸ், தேர்தலில் புதிய அணியோடு களம் கான திட்டம் வகுத்து வருகிறார். அதற்கு ஏற்றார் போல் மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் கூறியுள்ளார். இந்தநிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகபொதுச் செயலாளரும்,தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி ரி. பழனிசாமி அவர்கள் தலைமையில், பூத் கமிட்டி; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், நாளை 21.11.2023 – செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பூத் கமிட்டியின் செயல்பாடுகள், தேர்தல் பணியை தொடங்குவது, கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.