தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை, அரசு நிகழ்வுகளில் ஆர்எஸ்எஸ் சிந்தாந்தங்களை புகுத்துவது. தமிழக அரசுக்கு எதிராக கருத்து கூறுவது என தொடர் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லையென கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில் தமிழக மக்களின் உரிமைகளை தமிழக ஆளுநர் பறிக்கிறார். மக்கள் தேர்வு செய்த அரசை செயல்படவிடாமல் தடுக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் ஊழல் விவகாரங்களில் விசாரணையை தொடர்வதிலும் குறுக்கே நிற்கிறார் என புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த மனு மீது கடந்த 10 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது திங்கள்கிழமைக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனிடைய ஆளுநர் ரவி கிடப்பில் போட்டிருந்த 10 சட்ட மசோதாக்களை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதனையடுத்து தமிழக சட்ட சபையின் அவசர கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது மீண்டும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆளுநர் ரவி நேற்று மாலை அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஆளுநர் டெல்லி சென்றிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆளுநரின் டெல்லி பயணத்தில் சட்ட வல்லுநர்களோடு ஆலோசிக்கவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அறிக்கை அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கை பொறுத்து அடுத்த கட்டம் தொடர்பாக மத்திய அரசுடன் ஆளுநர் ஆர் என் ரவி ஆலோசிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal