திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார்

தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீண்ட நாட்களாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்க கூடாது என கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.

இதனை அடுத்து நேற்று நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றி உள்ள நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal