நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகி, தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து ‘லேடி சூப்பர் ஸ்டார்’ எனும் அளவுக்கு பெயர் பெற்றவர் நடிகை விஜயசாந்தி (57). கடந்த 1998-ம் ஆண்டில் அவர் பாஜகவில் இணைந்தார். திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த விஜயசாந்தி, அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடிக்கலாம் என்று நினைத்தார். ஆனால், பாஜகவில் அவருக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று அதிருப்தி ஏற்பட்டது.

பின்னர், தல்லி தெலங்கானா என்ற கட்சியை தொடங்கினார். அதன்பிறகு தனது கட்சியை சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைத்தார்.

முதல்வர் சந்திரசேகர ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் அவர் இணைந்தார். கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் மேதக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் கடந்த 2020-ம் ஆண்டில் அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் விஜயசாந்தி இணைந்தார்.

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு பாஜக சீட் வழங்கும் என அவர் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் ஹைதராபாத்தில் நேற்று அவர் காங்கிரஸில் இணைந்தார்.

இது குறித்து விஜயசாந்தி கூறும்போது, ‘‘முதல்வர் சந்திரசேகர ராவின் ஊழல் ஆட்சி குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி அளித்ததால் பாஜகவில் இணைந்தேன். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். சந்திரசேகர ராவ் ஊழலை அம்பலப்படுத்தி அவரிடம் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்வோம்’’ என்று தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal