திருச்சி தி.மு.க.வைப் பொறுத்தளவில் அருண் நேருவின் ஆதரவைப் பெற்றால் போதும், மாவட்டத்தில் என்ன வேண்டுமானாலும் சாதித்துக்கொள்ளலாம். காரணம் ‘எல்லாமே அவர்தான்!’ அமைச்சர் சென்னையில் இருந்து திடீர்னு திருச்சிக்கு வந்து சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் அவ்வளவுதான்.

இந்த நிலையில்தான், அருண் நேருவின் மனதில் எப்பாடியாவது இடம் பிடித்தாக வேண்டும் என்று வித விதமாக யோசித்து, விடிய விடிய வாசகங்களை ரெடி செய்து போஸ்டர் ஒட்டுவதுதான் திருச்சி உ.பி.க்களின் வேலையாக இருக்கிறது.

‘இதய துடிப்புக் கூட ஒரு நொடி மாறலாம். ஆனால், உங்கள் மீது நாங்கள் வைத்துள்ள அன்பு ஒரு நொடி கூட மாறாது… ‘அருணாலயமே!’ உம்மையே சரணடைந்தோம்… என்ற வாசகம்தான் திருச்சியில் பட்டிமன்றத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

கலைஞர் கருணாநிதி அவர்கள் மாவட்டம் தோறும் அறிவாலயத்தை கட்டி, அதற்குரிய மரியாதையை செலுத்தினார். ஆனால், திருச்சி உடன் பிறப்புக்கள் அறிவாலயத்தை அருணாலயமாக மாற்ற முயற்சிக்கிறார்களா?- என்று கொந்தளிக்கிறார்கள் மூத்த உடன் பிறப்புக்கள்.

இது பற்றி திருச்சியில் உள்ள மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், திருச்சியைப் பொறுத்தளவில் அருண் நேருவின் ஆசி இருந்தால் போதும்… என்ன தவறு செய்தாலும் தப்பித்துவிடலாம் என்று ஒரு சில நிர்வாகிகள் இருக்கிறார்கள். குறிப்பாக திருச்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாகி, ‘அருண் நேரு ஆசி எனக்கு இருக்கிறது’ என்று அவர் போடும் ஆட்டத்திற்கே அளவில்லையாம். அவர் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தால், அவருக்கு எதிர்மறையாக நியமிக்கப்பட்ட நிர்வாகியை வைத்தே, அந்த செய்தி ‘தனிநபர் பகையால் வருகிறது’ என்று சொல்லிவிடுகிறார்களாம். அருண் நேருவும் ‘அப்படியா-?’ என்று விட்டுவிடுகிறாராம்.

இப்படி செய்வதுதான் தவறு. அங்குள்ள மற்ற நிர்வாகிகளிடம் நிலைமை எப்படி இருக்கிறது என உண்மை நிலையை கண்டறிய வேண்டும். மேலும் அந்த நிர்வாகி கனிமவளத்தை தொடர்ச்சியாக கொள்ளையடித்து வருகிறார். கணக்கில் காட்டப்படாத ஜல்லிக்கற்களை மலைபோல் குவித்து, தனக்கு கொடுக்கப்பட்ட பணியை மறந்து, காண்டிராக்ட் பணியில் (பினாமி பெயரில்) கவனம் செலுத்தி வருகிறார்.

இதையெல்லாம் யாராவது அருண் நேருவிடம் சொல்ல முயற்சித்தால், மறைமுகமாக தடுத்து விடுகிறாராம். இது பற்றி யாராவது பேசினாலும், ‘என் வளர்ச்சி பிடிக்காமல் பேசுகிறார்கள்?’ என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறாராம். இவர் பற்றி மத்திய உளவுத்துறைக்கே தகவல் அனுப்பியிருக்கிறார்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், அருண் நேரு அந்த நிர்வாகிக்கு ஆதரவு கொடுத்தால், அவப்பெயர் அவருக்கும் சேர்ந்துதான் ஏற்படும் என்பதை உணரவேண்டும்.

எனவே, அருண் நேருவிடம் நல்லப் பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக உண்மையை மறைத்து வேஷம் போடும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று சொன்னவர்கள், ‘சார், ‘‘வளர்ச்சி வளர்ச்சி’’ என்கிறார்களே… கருர் கே.சி.பழனிசாமியைவிடவா? செந்தில் பாலாஜியை விடவா..?’ என்று நம்மையே திருப்பிக் கேட்டனர்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட முயற்சிக்கும் அருண் நேரு, தனக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்களுக்கு ஆதரவு கொடுக்காமல், கண்டிப்பு காட்ட வேண்டும் என்பதுதான் உண்மையான உடன் பிறப்புக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal