சுகாதாரதுறையின் அவலநிலை குறித்து எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் நூறு சதவீதம் உண்மை என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் உண்மைக்கு புறம்பாக அறிக்கை விடுத்தார் எனவும் தெரிவித்துள்ளார் என அ.தி.மு.க-. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மேலும், இது பற்றி மதுரை டாக்டர் சரவணன் கூறியதாவது; ‘‘தமிழகத்தில் 37 அரசு மருத்துவமனை கல்லூரிகள், 50 மருத்துவக் கல்லூரிகள் இணைந்த மருத்துவமனைகள், 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 237 தாலுகா மருத்துவமனைகள், 1086 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 சுகாதார நிலையங்கள், 460 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், 15 நகர்ப்புற சமுதாய மையங்கள் என உள்ளன.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மருத்துவமனையில் எல்லாம் மருந்துகள் போதுமான இருப்புகள் இருந்தது, குறிப்பாக ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை எடப்பாடியார் உருவாக்கி கொடுத்தார். கிராமப்புறங்களில் 2000 அம்மா மினிகிளினிக் உருவாக்கி அதன் மூலம் மாதத்திற்கு 25 லட்சம் மக்களை பயன் அடையச் செய்தார்.

தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி இடம்பெற செய்யும் வகையில் எடப்பாடி பழனிசாமி மருத்துவ புரட்சியை செய்தார். ஆனால் தற்போது நிலைமை என்ன? நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட பல்வேறு நோய்களால் சாமானிய மக்கள் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு மருந்துகள் இல்லை என்று சொல்கிறார்கள். உயிர் காக்கும் மருந்துகள் இருப்பதில்லை சாதாரண மருந்துகள் தான் இருப்பு வைத்துள்ளனர் என அங்கு உள்ள சில மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக பிப்ரசிலின், மீரோபினம், டாசோபாக்டம் போன்ற மருந்துகள் இல்லை என கூறி மருந்து கடைகளில் மக்களை வாங்கி வர சொல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

தமிழகத்தில் 1086 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்களில் மருந்துகள் இல்லை, மருத்துவர் இல்லை என மக்கள் புகார் அளிக்கிறார்கள்.சமீபத்தில் கூட முன்னாள் சுகாதார துறை செயலாளரும்,தற்போது சென்னை கமிஷனர் ராதாகிருஷ்ணன், காயமடைந்த தனது உதவியாளரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு மருத்துவர்கள் இல்லை ,மேலும் ஆம்புலன்ஸும் இல்லை உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு சேர்த்து உள்ளார் இதை சுகாதாரத் துறை அமைச்சர் மறுக்க முடியுமா?

அதேபோல் கொரோனா காலத்தில் உயிர் இழந்த மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்திற்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி அளித்தார் மூன்று முறை நேரில் சென்று வலியுறுத்தியும் இதுவரை அளிக்காது ஏன்? ஆகவே கழகப்பொதுச்செயளாலர் எடப்பாடியார் சுகாதாரத்துறை அவலநிலை குறித்த அறிக்கை 100% உண்மையே ஆகவே அரசு மருத்துவமனையில் என்னென்ன மருந்துகள் இருப்பது என்பதை மக்களுக்கு தெளிவாக அரசு விளக்கிட வேண்டும் இல்லையெனில் வருகின்ற தேர்தலில் மக்கள் உங்களுக்கு சரியான தீர்ப்பை வழங்குவார்கள்’’ இவ்வாறு சரவணன் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal