செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு ‘செக்’ வைக்கும் விதமாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இருதயத்தில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். 100 நாட்களைக் கடந்தும் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி பலமுறை ஜாமின் கேட்டு நீதிமன்றத்தை நாடினார். ஆனால் ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனிடையே சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் , செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா என எந்த வித உத்தரவும் நீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தது. எனவே செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா என்பதை முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எம்எல் ரவி என்பவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மனுவில், அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி தொடரக்கூடாது என ஆளுநர் உத்தரவை திரும்ப பெறப்பட்டது தொடர்பாகவும், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்வது குறித்தும் உரிய விளக்கம் அளிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக இருப்பதில் எந்த பயனும் இல்லை, எதற்கும் உதவாது எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் பதவி நீக்கம் செய்ய சட்டம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது சரியானதாக இல்லை என்றும் இதற்கான தற்காலிக தேர்வு நீதிமன்ற தரவேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal