தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்.இதற்காக இன்று சிறப்பு கூட்டம் நடத்தி மீண்டும் நிறைவேற்றி அனுப்புகிறார்கள். இது பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:- இந்த விவகாரத்தில் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்கள்? கவர்னருக்கு கண்டனம், கவர்னருக்கு எதிராக போராட்டம் இப்படி ஒரே அஜண்டாவை வைத்து தி.மு.க. அரசியல் செய்கிறது.
கவர்னருக்கு எதிரான அவர்களது நடவடிக்கையில் ஆச்சரியம் இல்லை. தாங்கள் செய்த ஊழல்கள் வெளியே வந்துவிடக்கூடாது. ஊழல் வழக்குகளில் சிக்கும் அமைச்சர்களை பற்றி பொதுமக்கள் பேசக்கூடாது என்பதற்காக திசை திருப்பும் முயற்சியை தி.மு.க. செய்து வருகிறது. கோப்புகள் சரியாக அமைந்திருந்தால் கவர்னர் ஏன் கையெழுத்து போட மாட்டார். நீட்டை பொறுத்தவரை தமிழகத்தை தவிர எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.மாநில மக்களுக்கு நன்மை பயக்காத தனக்கும், குடும்பத்துக்கும் தங்கள் அமைச்சரவை சகாக்களுக்கும் மட்டுமே பலன் அளிப்பதாக இருந்தால் கவர்னர் எப்படி அனுமதிப்பார்? ஒருமுறைக்கு பலமுறை யோசித்துதான் முடிவெடுப்பார். அவர் என்ன தாசில்தார் வேலையா பார்க்கிறார்?
இருக்கிற சாலைகள் எதுவும் சரியில்லை. 15 நாட்களுக்கு முன்பு போட்ட ரோடுகளும் குண்டும் குழியுமாகிவிட்டன. ஆனால் முதல்வர் வீடு, அலுவலகம், அதை போல அமைச்சர்கள் வீடுகள் இருக்கும் சாலைகள் எங்கும் பழுதாகவில்லை. அந்த சாலைகள் மட்டும் பழுதாகவில்லை. இது எப்படி? மக்கள் நலனை தி.மு.க. அரசு மறந்ததற்கு வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். ஊழலை மறைக்க இதுபோல் இன்னும் நாடகம் ஆடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்