வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இளைஞரணிக்கு 5 எம்.பி. சீட்களையாவது ஸ்டாலினிடம் கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இது பற்றி உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்.

‘‘ திமுகவின் சார்பு அணிகளில் பிரதான இடத்தில் இருப்பது அக்கட்சியின் இளைஞரணி. ஸ்டாலின், வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகிய இருவர் வசம் இருந்த திமுக இளைஞரணி இப்போது கடந்த 5ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலின் வசம் உள்ளது. ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்தக் காரணத்தால் அந்த அணியின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் அனைத்தும் கட்சியினரால் உற்றுநோக்கி கவனிக்கப்பட்டு வருகின்றன. திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினும், 9 மாநில துணைச் செயலாளர்களும் உள்ளனர்.

சமீபத்தில் இளைஞரணிக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரின் சிபாரிசுக்கு வேலையில்லாமல், ‘உழைப்புக்கு பதவி’ என்பதை உருவாக்கிவிட்டார் உதயநிதி. இதில்தான் மு.க.ஸ்டாலினே வியர்ந்து போய்விட்டாராம். கலைஞரே சிபாரிசுக்கு இடம் கொடுத்த நிலையில், உதயநிதி ‘உழைப்புக்குத்தான் பதவி’ என்பதில் உறுதியாக இருந்துவிட்டார்.

இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெறுவதை ஒட்டி அது தொடர்பான பணிகளில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த மாநாடு முடிந்த பிறகு மாநாட்டிற்கு யார் யார் எந்தெந்த வகையில் கடுமையாக உழைத்தார்கள் என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி.சீட் கொடுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகம் புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 இடங்களில் திமுக இளைஞரணிக்கு 5 இடங்களை தலைமையிடம் கேட்டு வாங்குவது என்ற முடிவில் இருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தனுஷ்குமார், திருவண்ணாமலை அண்ணாதுரை, தர்மபுரி செந்தில்குமார் ஆகிய மூவரும் இளைஞரணி கோட்டாவில் தான் எம்.பி.சீட் வாங்கி டெல்லி சென்றனர். இந்த முறை 5 இடங்களை கேட்டு வாங்கி அதில் யாருக்கு வாய்ப்பு தருவது என்பதை உதயநிதி ஸ்டாலின் தான் முடிவு செய்யவுள்ளார்.

தற்போது சேலம் மாநாட்டிற்குப் பிறகு இளைஞரணியில் திறம்பட செயலாற்றும் ஐந்து முதல் ஏழு பேருக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு உறுதியாக கிடைக்கும்’’ என்றனர்.

பாராளுமன்றத்தில் தி.மு.க. இளைஞர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்று நினைக்கிறாரோ உதயநிதி..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal