வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளாது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், தற்போது அதி தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் மழையானது கொட்டி வருகிறது. இந்தநிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள காரணத்தால் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வருவாய் துறை நிர்வாக ஆணையர் பிரபாகர் 27 மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், வானிலை மையம் வெளியிட்டுள்ள மழை எச்சரிக்கை தகவலையும் இணைத்துள்ளார். இன்று கடலூர், விழுப்புரம்,செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளைய தினம் (15-,11,-2023) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளாதக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர்களை பேரிடர்களைக் கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும், முழு மாவட்ட நிர்வாகங்களை தயார்படுத்தவும், கனமழை முதல் மிகக் கனமழையை சமாளிக்க போதுமான தயார்நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal