தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை காவல் துறை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘சென்னை அண்ணா நகரில் கஞ்சா போதையில் கார் ஓட்டிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக இளைஞர்கள் மதுவுக்கும், கஞ்சாவுக்கும் அடிமையாகி மிக மோசமாக சீரழிந்து வருகின்றனர். கஞ்சா, மதுவால் நிகழும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ஆகியவை மனதை பதறவைக்கின்றன.

மதுவின் தாக்கம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த விபரீதத்தை தமிழக அரசு உணர வேண்டும். போதைப் பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லை என்பதற்கு தற்போது நடக்கும் கொலை, கொள்ளைகளே உதாரணம்.

எனவே, கஞ்சா பொருட்களின் புழக்கத்தை தமிழக காவல் துறை அடியோடு ஒழிக்க வேண்டும். இதன் விற்பனையாளர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழக அரசு இதை வெறும் வார்த்தையோடு மட்டுமின்றி, நடைமுறையில் உறுதிசெய்ய வேண்டும். இதன்மூலம், வருங்கால தமிழகம் போதையில்லா தமிழகமாக மலரவேண்டும்’’இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal