தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.வில் உச்சக் கட்ட கோஷ்டிபூசல் நிலவுவதால், உண்மையான உடன் பிறப்புக்கள் உள்ளக்குமுறலில் உள்ளனர்.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் தமிழ்ச் செல்வி. இவர் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக தென்காசியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ‘கட்சிக்குள்ளேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! நீங்களா பாதுகாப்பை பற்றி பேசுகிறீர்கள்’ என பொங்கினார்.

அதன் பிறகு மாவட்டச் செயலாளராக இருந்த சிவ பத்மநாபன் மாற்றப்பட்டார். இந்த நிலையில்தான் தென்காசி மாவட்டம் ரெட்டியார் பட்டியில் உள்ள இவரது வீட்டிற்கு வந்த மர்மநபர்கள் வீட்டை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணையும் நடக்கிறது.

இந்த நிலையில்தான் தென்காசி மாவட்ட தி.மு.க.வில் நடக்கு கோஷ்டி பூசல் குறித்து நடுநிலையான உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் விடு தாக்கப்பட்டு, காவல் நிலையம் வரை பஞ்சாயத்து சென்றிருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் நாடார் மற்றும் தேவர் சமுதயாத்திற்கு இடையேயான சாதிமோதலையே தூண்டும் அளவிற்கு தி.மு.க. உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

ஏற்கனவே மாவட்டச் செயலாளராக இருந்த சிவ பத்மநாபன் செய்த அரசியல் உள்குத்துகள் இன்னும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. இம்மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒன்றியப் பெருந்தலைவர் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை. இப்படி உட்கட்சிப் பூசல் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையிலும், மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தன் பங்கிற்கு ‘அரசியலை’ செய்துவிட்டுப் போகிறார். இங்கு நடக்கும் உட்கட்சிப் பூசலை முடிவுக்கு கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைவிடக் கொடுமை இங்கு நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் சம்பந்தமே இல்லாத ஒருவருடைய புகைப்படத்தை போட்டே ஆகவேண்டும் என்ற உத்தரவும் மறைமுகமாக போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ‘அன்பகத்திற்கு’ நெருக்கமானதாக கூறப்படும் இவர்தான் எம்.பி. வேட்பாளராம். இவரது அரசியலும் ஒருபக்கம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு முன்பு பூங்கோதை ஆலடி அருணா அமைச்சராக இருந்போது, எந்தவொரு சர்ச்சைகளும் எழாமல் பார்த்துக்கொண்டார். தென்காசி மாவட்டமும் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது. ஆனால், தற்போது சாதிய மோதலே உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, தமிழக முதல்வரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு, உண்மையான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal