‘என்னை சந்திக்க யாரும் வரவேண்டாம்..!’ என பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டிருப்பதுதான், உடன்பிறப்புக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அமைச்சர் கே.என்.நேருவின் பிறந்தநாள் நாளை மறுநாள் (நவம்பர் 9) வருகிறது. திருச்சி மாவட்ட திமுகவினர், அமைச்சரும், திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், கட்சியினருக்கு ஒரு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டுள்ளார் கே.என்.நேரு.
இது தொடர்பாக, ‘‘எனது பிறந்தநாளான வருகின்ற நவம்பர் 9ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நான் ஊரில் இல்லை. அன்றைய தினம் எனது பிறந்தநாளை ஒட்டி என் மேல் அன்பு கொண்ட நல்ல உள்ளங்களும், நண்பர்களும், கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திருச்சிக்கோ, சென்னைக்கோ நேரில் வந்து எனக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டாம்.
மேலும், அன்றைய தினம் எனது பிறந்தநாள் விழா என்ற பெயரில் எவ்வித நிகழ்ச்சிகளையும் தயவு செய்து யாரும் நடத்திட வேண்டாம் என்றும், கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அமைச்சர் கே.என்.நேரு.
தனது பிறந்தநாளையொட்டி, தன்னை நேரில் சந்திக்க யாரும் வர வேண்டாம் என்றும், தனது பிறந்தநாளுக்கு எந்த நிகழ்ச்சியையும் நடத்த வேண்டாம் என்றும் அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தி இருப்பது அவரது ஆதரவாளர்களையும், திருச்சி திமுகவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அண்மையில் சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணியை ஆய்வு செய்த கே.என்.நேரு, அதில் ஏற்பட்ட குளறுபடி குறித்து ஒப்பந்ததாரரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது ஒப்பந்ததாரர் விளக்கம் அளிக்கும் போது, டென்ஷன் ஆன அமைச்சர் கே.என்.நேரு, கெட்ட வார்த்தையில் திட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதனால், கடும் அப்செட்டில் இருக்கும் கே.என்.நேருவை, திமுக தலைமையும் அழைத்து, இதுகுறித்து கண்டித்ததாக கூறப்படுகிறது. கள வீரர் என முதல்வர் ஸ்டாலினால் பெருமையாக புகழப்படும் கே.என்.நேரு, இந்த விஷயத்தால் மேலும் அப்செட்டாகி உள்ளதாக தெரிகிறது. பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம், தன்னை சந்திக்க வேண்டாம் என அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தவிர தீபாவளி நெருங்கும் சமயத்தில் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ‘என்னை சந்திக்க நேரில் வரவேண்டாம்’ என கே.என்.நேரு ‘ஸ்ட்ரிக்’ உத்தரவு போட்டிருப்பதுதான் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. காரணம், ‘கெடைக்கறதும் கெடைக்காம போயிருதே’ என்ற கவலையில் இருக்கிறார்களாம்!