எம்.ஜி.ஆருக்கு பிறக்கு நடிகர்கள் தனிக்கட்சி தொடங்கி முதல்வர் நாற்காலியில் இதுவரை அமர்ந்தது கிடையாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியை வழிநடத்தி முதல்வர் ஆனார்! தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்கு உயர்ந்தாரே தவிர, முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை.

இந்த நிலையில்தான் நடிகர் விஜய் அரசியல் தீவிரமாக குதித்திருக்கிறார். இவர் எம்.ஜி.ஆரின் சாதனையை நிகழ்த்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவருக்கு நாற்காலியில் அமரும் யோகம் இருக்கிறதா? இவரது ஜாதகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்…

ஒரு கிரகம் நீச்சம் பெற்றிருந்து அந்த நீசம் பெற்ற கிரகம் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்ற கிரகத்துடன் நீசம் பெற்ற கிரகம் இணைந்திருப்பது நீச பங்க ராஜயோக அமைப்பை தரும். இந்த யோகம் பெற்றவர்களுக்கு திடீர் அரசாளும் யோகம் தேடி வரும்.

நடிகர் விஜய் கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். அவரது ராசியில் சந்திரன் உடன் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலும் ஆட்சி பெற்ற சந்திரன் உடன் அமர்ந்திருப்பதால் நீச்ச பங்க ராஜயோக அமைப்பு நடிகர் விஜய்க்கு உள்ளது.

ராஜ கிரகங்களான சூரியன், சனி சேர்ந்திருப்பது அரச பதவியை தேடித்தரும். கன்னி லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் சூரியன், சனி ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்திருக்கின்றனர். ரிஷப ராசியில் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் கேது இணைந்திருப்பதும் யோகமான அமைப்பு. கலைத்துறையில் பிரபலமான நடிகராக வருவதற்கு இதுவே காரணமாக அமைந்திருக்கிறது.

நடிகர் விஜய் இளைய தளபதியாக இருந்து தளபதியாக மாறியிருக்கிறார். அவரது ராசி லக்னப்படி கும்ப ராசியில் சனி கோச்சாரத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார் என்றாலும் அவர் முழுமையான அரசியல்வாதியாக மாற இன்னும் 2 ஆண்டுகள் ஆகும்.

தனது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை கொடுத்தார் விஜய். ஜூன் 17 நிறைந்த அமாவாசை நாள். மிதுன ராசியில் சூரியன், சந்திரன் சேர்ந்திருக்க மாணவர்களுக்கு பரிசளித்து குருவின் பலத்தை அதிகரித்துக்கொண்டார்.

அரசியல்வாதிகள் என்றாலே நன்றாக பேசத்தெரிந்திருக்க வேண்டும். நடிகர் விஜய் தற்போது நிறைய பேச ஆரம்பித்திருக்கிறார். மாணவர்களிடம் அரசியல் தலைவர்கள் பற்றி பேசினார். லியோ வெற்றி விழாவில் எம்ஜிஆர் பற்றி பேசினார். நிறைய கொடுக்க வேண்டும் எம்ஜிஆர் போல புகழ் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இனி விஜய் பேசும் வார்த்தைகள் பலருக்கும் உதாரணமாக இருக்கும். விஜய் பேசும் வார்த்தைகளை கேட்கவே பலரும் விரும்புவார்கள். 10ஆம் வீட்டில் சனியுடன் புதன் சேர்ந்திருப்பதால் நகைச்சுவையாக பேசுவார். 2026ஆம் ஆண்டு என்று கேட்டதற்கு கூட முதலில் நகைக்சுவையாக பேசி விட்டு கப்பு முக்கியம் பிகிலு என்று சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

நடிகர் விஜய் ஜாதகத்தில் சந்திரன் கடக ராசியில் செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்ச பங்க ராஜயோகம். இவருக்கு பெண்களின் ஆசி தாய்மார்களின் ஆசி நிச்சயம் கிடைக்கும். எம்ஜிஆர் போல இவரை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். சனி பகவான் சுப வலிமையுடன் இருந்தால் தொண்டர்களின் ஆசி கிடைக்கும்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சனி நல்ல வலிமையோடு இருப்பது அவசியம். சனி பலமாக இருப்பதால் ஜன வசியம் இருக்கும். விஜய் ஜாதகப்படி 2014ஆம் ஆண்டு முதல் சுக்கிர திசை நடைபெறுகிறது. இப்போது சுக்கிர திசை ராகு புத்தி நடந்து கொண்டிருக்கிறது. தலைவா படத்தின் போது நிறைய நெருக்கடியை சந்தித்தார் விஜய். அரசியல் ரீதியான பிரச்சினைகளை சந்தித்தார். சுக்கிரதிசை ஆரம்பித்த பிறகுதான் தொடங்கியது. காரணம் சுக்கிரன் உடன் தடைகளை ஏற்படுத்தும் கேது இருக்கிறார்.

சுக்கிரன் வண்டி வாகனத்திற்கு ஆடம்பர வாழ்க்கைக்கு அதிபதி. நடிகர் விஜய் வாங்கிய கார் மூலம் வழக்கு வந்தது. இவருடைய பல திரைப்படங்கள் சர்ச்சைகளை சந்தித்துதான் வெற்றி கிடைத்துள்ளது. 2026ஆம் ஆண்டு இவர் அரசியலில் அடி எடுத்து வைத்தாலும் தனது இருப்பை தக்க வைக்க முடியும். நான் யானைக்குதான் குறி வைப்பேன். பெரிய விஷயத்தை முயற்சி செய்கிறேன் என்று வெற்றி விழாவில் பேசிய விஜய் தெரிவித்துள்ளார். அவரது இலக்கு பெரியது.

இப்போது விஜய்க்கு 49 வயதாகிறது. அவரது 52வது வயதில் இருந்து முழு அரசியலில் ஈடுபடுத்திக்கொள்வார். 2031ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்று கணித்துள்ளனர் ஜோதிடர்கள். எனவே நடிகர் விஜய் முதல்வர் நாற்காலியில் அமருவாரா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal