தமிழகத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியை தி.மு.க. சிறப்பாக நடத்தி வருகிறது என தி.மு.க.வினர் மார்தட்டிக்கொண்டிருக்கும் நிலையில், திராவிட மாடல் அல்ல ‘திராவிட டீல்’ ஆட்சி நடக்கிறது என அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திமுக வை வழிநடத்தும் பல வீனமான தலைமை தன்னை விட ஒரு பரிதாபமான தலைமை தான் தங்களுக்கான எதிர் கட்சியாகவும் மாற்று சக்தியாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.

இந்த நோக்கத்தோடே தான் ஆரியம் திராவிடம் என்பதற்கான அர்த்தம் கூட அறியாத எடப்பாடியை அதிமுக வுக்கு தலைமைப் படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

அம்மாவிடம் அரசியல் பயின்ற ஓ.பி.எஸ்ஸோ அல்லது ஐ.பி.எஸ் படித்த அண்ணாமலையோ எதிர் மாடமாக வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் திமுக வின் வளர்ப்பு பிராய்லர் பிள்ளை தான் எடப்பாடி பழனிச்சாமி என்பதே சத்தியமான உண்மை.

ஆகவே எடப்பாடியை எதிரில் அமர்த்திக் கொண்டு தங்களை நிரந்தரமாக நிலை நிறுத்திக் கொள்ள திட்டமிடும் திமுக எடப்பாடியுடன் ஒரு ஒப்பந்த அரசியலை நடத்தி வருகிறது.

இவர்களது திரைக்கதை அரசியலுக்கு கே.பி. முனுசாமி முதல் ஓ.எஸ் மணியன் வரை பலரும் நல்லுறவுத் தூதுவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

எனவே கொடநாடு கொலை கொள்ளை வழக்கு எடப்பாடியின் சம்மந்தி மீதான 4500 கோடி டெண்டர் முறைகேடு அதே போல எடப்பாடியின் சகாக்கள் மீதான ஸ்மாரட் சிட்டி ஊழல் முறைகேடுகள் மின்துறையில் நடந்த மெகா ஊழல்கள் என எடப்பாடி ஆட்சிக் காலத்து தூர்வாரல்கள் எல்லாமும் மேல் நடவடிக்கைகள் இல்லாத கோமாயில் கிடத்தப்பட்டு வருவதன் பின்னணி இது தான்..

ஆக எடப்பாடி அதிமுக வையும் திமுக தான் திரை மறைவில் இருந்து வழிநடத்தி வருகிறது என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள தொடங்கி விட்டார்கள்.

எனவே மேற்படி “திராவிட டீல்” மாடலை தோலுரிக்கும் தேர்தலாக 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அமையும் என்பது நிச்சயம்’’ என்று அதில் கூறியிருக்கிறார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal