சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம் குறித்து அமைச்சர் பொன்முடி தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது வருமானத்துக்கும் அதிகமாக சொத்து குவித்ததுதொடர்பாக அமைச்சர் பொன்முடி உட்பட தி.மு.க., அ.தி.மு.க.வினர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகளில் பலவும் அடுத்தடுத்து மாவட்ட நீதிமன்றங்களால் ரத்துசெய்யப்பட்டன.
அப்படி ரத்துசெய்யப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் குறிப்பாக நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அவர்களால் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்கு அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீது பொதுவெளியில் விமர்சனம் வைக்கப்பட்டது. அதற்காக அவற்றின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய தான் விரும்பவில்லை என்றும் தன் கடமையையே செய்வதாகவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
பின்னர், மூன்று மாத சுற்றுப்பணியின்படி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே, அமைச்சர் பொன்முடி தரப்பில், ரத்துசெய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் மறுவிசாரணை செய்வதற்குத் தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே, ‘‘நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்றோர் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி’’ என்ற உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார்.
எனவே, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு விரைவில் சிக்கல் ஏற்படலாம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!