தி.மு.க. அமைச்சர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து, சில அமைச்சர்களை குறி வைத்து அடிக்கும் அமலாக்கத்துறை, அடுத்தது அ.தி.மு.க. மீது ‘ஆபரேஷனை’ ஆரம்பிக்கப் போகிறதாம். இந்த விஷயம் கசிந்து ‘மாஜி’க்களுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கையும் விடுத்திருக்கிறாராம்.
பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருந்த வரை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகள் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல்தான் ஜாலியாக வலம் வந்தனர். அத்தனை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகளும் ஒவ்வொரு திமுக அமைச்சர்களின் வீடுகளில் மட்டுமே நடந்து வந்தது.
தற்போது அமைச்சர் எ.வ.வேலு வீடு உள்ளிட்ட இடங்களில் 4-வது நாளாக இன்று அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறுகின்றன. ஏற்கனவே ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட திமுக தலைவர்களின் வீடுகளில் சோதனைகள் நடந்த போது, செந்தில் பாலாஜி போல கைது செய்யப்படுவார்களா? என்கிற யூகங்கள் பறந்தன. இப்போதும் எ.வ.வேலு மீது நடவடிக்கை பாயுமா? என்கிற விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
எ.வ.வேலுவை தொடர்ந்து திமுக தலைமையை நோக்கித்தான் அமலாக்கத்துறை நகரும் என ஒரு பக்கம் அந்த கட்சி ரொம்பவே உஷார் நிலையில் இருக்கிறது. ஆனால் தற்போது பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுகவோ, இனி நம் பக்கம் மீதுதான் அமலாக்கத்துறை கவனம் திரும்பும்.. நாம் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறதாம்.
அதிமுகவில் அமலாக்கத்துறை கை வைத்தால் ‘மாஜி‘ பெருந்தலைதான் முதலில் இருப்பார் என்கின்றன டெல்லி தகவல்கள். பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொள்ளவே கூடாது என வம்படியாக போராட்டம் நடத்திய ‘பெருந்தலை‘யின் வலதும் இடதுமாக இருந்தவர்கள் ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்தும் போயினராம். அவர்கள்தான் ஏற்கனவே தங்கள் வசம் இருந்த ‘பெருந்தலை‘ விவகாரங்கள் அடங்கிய அதிரகசிய கோப்புகளை தமிழ்நாடு பாஜக தலைமைக்கு ‘அன்பளி‘ப்பாக கொடுத்திருந்தனராம்.
அதிமுக- பாஜக இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருந்த போது டெல்லிக்குப் போன தமிழ்நாடு பாஜக தலைமை ‘இந்த கோப்புகளை‘தான் கொடுத்ததாம். இதை பார்த்து அதிர்ந்து போன டெல்லி தலைமை, தமிழ்நாடு பாஜக தலைமையை பாராட்டி அனுப்பி வைத்ததாம். அந்த கோப்புகளை வைத்துதான் அமலாக்கத்துறை அதிரடியாக களமிறங்கப் போகுதாம்.
கடந்த காலங்களைப் போல மாமன், மச்சான், சம்பந்தி என்றெல்லாம் களமிறங்குவார்கள் என எதிபார்க்கிறது அதிமுக பெருந்தலை. ஆனால் அமலாக்கத்துறை கோப்புகளில் ‘பெருந்தலை‘ தொடர்புடைய சந்து பொந்து என அத்தனை விவரங்களும் இருக்கிறதாம். அமலாக்கத்துறை சோதனை நடத்தப் போகிற நாளில்தான் இவர்களுமா? இங்கேயுமா? என்கிற ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் வெளிப்படும் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.