அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘சனாதனம்’ குறித்து பேசிய சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், அடுத்த சர்ச்சைக்கு சென்னை ஐகோர்ட் ‘குட்டு’ வைத்திருக்கிறதுஸ

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி, “சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு . வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம்” என்றார்.

உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அமைச்சர்கள் பலரும் கூட உதயநிதி பேச்சைக் கடுமையாக விமர்சித்தனர். மேலும், அவருக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் எல்லாம் கூட நடந்தனர். இந்தச் சர்ச்சை முடிவுக்கு வரவே சில வாரங்கள் வரை ஆனது. இதற்கிடையே “திராவிட சித்தாந்தம் ஒழிப்பு மாநாடு” என்ற தலைப்பில் நடக்கும் மாநாட்டிற்கு அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சில முக்கிய கருத்துகளையும் தெரிவித்தார். சமீபத்தில் சனாதன தர்மத்தை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற ஆளும் திமுக அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட், எந்தவொரு சித்தாந்தத்தையும் அழிக்க நடத்தப்படும் கூட்டங்கள், பிரிவினைவாத கருத்தைப் பரப்பவும் கூட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என்றார்.

பல்வேறு மற்றும் வேறுபட்ட சித்தாந்தங்கள் இணைந்து வாழ்வதே இந்த நாட்டின் அடையாளம் என்று கூறிய நீதிபதி ஜெயச்சந்திரன், திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த அனுமதி வழங்குமாறு ஆவடி காவல்துறைக்கு உத்தரவிட மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக நீதிபதி மேலும் கூறுகையில், “பொதுமக்கள் இடையே அவதூறு கருத்துகளைப் பரப்ப நீதிமன்றங்கள் உதவுமென யாரும் எதிர்பார்க்க வேண்டாம். சனாதன ஒழிப்பு மாநாட்டில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலரும், அமைச்சர்களும் கலந்து கொண்டு சில கருத்துகளைக் கூறியுள்ளனர். அவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசார் தங்கள் கடமையில் இருந்து தவறியுள்ளனர். இதன் காரணமாகவே இப்போது இப்போது திராவிடக் கொள்கையை ஒழிக்கக் கூட்டங்கள் நடத்த அனுமதி வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், சமூகத்தில் நிலவுக்கும் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும். எனவே, இந்த மனுவை அனுமதிக்க முடியாது. அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

திராவிட சித்தாந்தத்தை ஒழிக்க மாநாடு நடத்த அனுமதிப்பதன் மூலம் இந்த பிரச்சினையைத் தீர்க்க முடியாது. மனுதாரர் இந்த கூட்டத்தை நடத்துவது தனது அடிப்படை உரிமை என்று கூறுகிறார். இந்த கருத்தை ஏற்க முடியாது. பிளவுபடுத்தும் கருத்துக்களைப் பரப்ப யாருக்கும் இங்கே உரிமை இல்லை. சித்தாந்தம், ஜாதி, மதம் என மக்களைப் பிளவுபடுத்துவதற்குப் பதிலாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் சமூகத்திற்குக் கெடு விளைவிக்கும் போதைப்பொருளை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறி மனுவை டிஸ்மிஸ் செய்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal