அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெ.சீனிவாசனின் செயல்பாடுகள் மலைக்கோட்டை மாவட்ட ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

திருச்சி மாநகர் அ.தி.மு.க.வில் எத்தனையோ சீனியர்கள் இருக்கையில், ஜெ.சீனிவாசனுக்கு எப்படி அதிர்ஷ்டம் அடித்தது என்று மலைக்கோட்டை மாவட்ட மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.

‘‘சார், முதலில் நீங்கள் ‘அதிர்ஷ்டம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதே தவறு. கடந்த 2001ம் ஆண்டு திருச்சி மாநகராட்சி தேர்தலில் ஜெ.சீனிவாசனை வேட்பாளராக மறைந்து முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். அன்றைய தினம் அவரது பிறந்த நாளும் கூட! அதன் பிறகு 2006 மரியம்பிச்சை மறைவிற்கு பிறகு மண்டலக்குழுத் தலைவர், 2009 ல் எதிர்க்கட்சித் தலைவர், அதே 2009ம் ஆண்டு அம்மா பேரவைச் செயலாளர், கோட்டச் செயலாளர், துணை மேயர் என படிப்பாடியாக 20 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து இன்றைக்கு மாவட்டச் செயலாளர் பதவியை பிடித்திருக்கிறார்.

திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசனைப் பொறுத்தளவில் கட்சிக்கு விசுவாசமாக உழைக்கக் கூடியவர். அனைத்து தரப்பினரையும் அரவனைத்துச் செல்லக்கூடியவர். இவரது உழைப்பைப் பார்த்துதான் எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர் பதவியை கொடுத்திருக்கிறார். எத்தனையோ பேர் குறுக்கு வழியில் பதவியை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை.

இந்த நிலையில்தான் மாவட்டச் செயலாளர் மீது ஏதாவது அவதூறு கிளப்ப எதிர்தரப்பினர் காத்திருந்தாலும், அதற்கு கொஞ்சமும் இடம்கொடுக்காமல், தனக்கு கொடுத்த கட்சிப் பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று இருக்கிறது.

அதாவது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கு இவர் விவகாரத்தில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. கடந்த 2001ம் ஆண்டு கவுன்சிலர் வேட்பாளராக அறிவிக்கும் போதும் ஜெ.சீனிவாசனுடைய பிறந்தநாள். தற்போது, எடப்பாடியார் மாவட்டச் செயலாளராக அறிவித்த நாளன்றும் ஜெ.சீனிவாசனுக்கு பிறந்தநாள். பிறகட்சிகளில் உள்ள முக்கியமான நிர்வாகிகளை எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைத்திருக்கிறார்.

கட்சி நிர்வாகிகளைத் தாண்டி, பொதுமக்களும் மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசனை எந்நேரமும் சந்தித்து, எதிர்க்கட்சியாக இருந்தாலும் தங்களது குறைகளை கூறிவருகின்றனர். ஏற்கனவே துணைமேயராக இருந்த அனுபவத்தில், அவர்களுடைய குறைகளை போக்கி வருகிறார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்’’ என்றனர்.

ஒருவர் வாழ்வில் வளர்ச்சி அடைவதற்கு அதிர்ஷ்டம் மட்டும் போதாது, உழைப்பும் தேவை என்பதை நிரூபித்திருக்கிறார் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal